அவளு(னு)ம் ஒரு பெண்! (ஒரு பக்க கதை)

அஞ்சலி வெறுத்து போயிருந்தாள். அவளுக்கு பொறுமையே போய் விட்டது. வெகு நேரம் காத்திருந்தும் அவள் போக வேண்டிய 1C பேருந்து வரவே இல்லை. அவளின் பொருமையின்மைக்கு மற்றொரு முக்கிய காரணம் அவள் அருகில் அவள்(ன்) நின்றிருந்தாள்(ன்).

"சை! இதுங்களை எல்லாம் யார் இங்கே வந்து நிக்க சொன்னாங்க? எப்போ பார்த்தாலும் கூட்டமா தானே திரியுதுங்க. அங்க போக வேண்டியது தானே. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் நம்ம கண் முன்னாடி வந்து நிக்குதுங்க" என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு இருந்தவள் செலவானாலும் பரவாயில்லை ஆட்டோவில் சென்று விடலாமா என்று யோசித்த வேளையில் தான் அவளின் பேருந்து வந்தது.

எல்லாரும் அலுவலகம் முடிந்து கிளம்பும் நேரம் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதோ...பின் சீட்டில் இருவர் எந்திரிப்பது போல் தெரியுது. அவங்க பக்கத்துல போனால் அவங்க எந்திரிச்ச உடன் நாம் உட்காரலாம் என்று அங்கே சென்றாள். அவள் நினைத்தது போலவே அவர்கள் எந்திரித்த உடன் ஒரு சீட்டில் அவள் உட்கார்ந்தாள்.

"அப்பாடா, இனிமேல் ஒரு மணி நேரம் நிம்மதியாக கழிக்கலாம்" என்று நினைத்தவளுக்கு இடி.

தூர நின்றதே அஞ்சலியால் பொறுக்க முடியவில்லை. இப்போது அவள்(ன்) அவளின் பக்கத்துக்கு சீட்டில் வந்து அமர்ந்தாள்(ன்). அஞ்சலிக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. முள் மேல் உட்காருவது என்றால் இப்படி தான் இருக்குமோ என்று யோசித்தாள். அங்கிருந்து வெளியே குதித்து விடலாமா என்று கூட நினைத்தாள். சரி, எப்படியாவது பல்லை கடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் பொறுத்தால், நம் வீடு வந்து விடும். பின் இதுங்க மூஞ்சிலயே முழிக்க வேண்டியது இல்லை என்று தனக்குள் முடிவெடுத்து முகத்தை திருப்பிக் கொண்டாள். முடிவு என்னவோ எடுத்து விட்டாள். ஆனால் அதை செயலாக்குவது தான் அவளுக்கு மிக கடினமாக இருந்தது.

கண்ணை மூடிக்கொண்டு தன் இஷ்ட தெய்வங்களிடம் "சீக்கிரம் கொண்டு சேர்த்து விடு" என்று வேண்டிக் கொண்டு இருந்த போது திடீரென்று அவளது வலது காலில் ஊசி குத்துவது போல் வலி ஏற்பட்டது. என்ன ஆச்சு என்று அவள் உணரும் முன்னரே "ஆ...." என்று அவள் வாய் குரல் குடுத்தது, கண்ணில் நீர் வழிந்தது. கீழே குனிந்தால் அவளின் கால் சுண்டு விரல் நகம் பிஞ்சி இரத்தம் வழிந்துக்கொண்டு இருந்தது.

"யோவ்! அறிவிருக்கா உனக்கு? தண்ணி அடிச்சுட்டு வந்தியா? இப்படி மிதிச்சுட்டியே. .பாரு எப்படி வலி தாங்காமல் அழுவுது இந்த பொண்ணு...ஐயோ பாவம். ரொம்ப வலிக்குதாம்மா? வீட்டுக்கு போனதும் கொஞ்சம் மஞ்சள் தடவு, சரி ஆய்டும். அழாத கண்ணு..." அவள்(ன்) பேசிக்கொண்டே போனாள்(ன்).

இப்போது அஞ்சலியின் கண்ணில் வழிந்த நீர் வலியால் அல்ல. தன் தவறை உணர்ந்து வெட்கி தலை குனிந்தாள்.

Comments

Popular posts from this blog

The Buzz

Hit and Run

Guilty or not?