பால் அபிஷேகம் (ஒரு பக்க கதை)

"அம்மா, ஒரு அம்பது ரூபா அட்வான்ஸ் குடுங்கம்மா, அடுத்த மாதம் சம்பளம் குடுக்கும் போது பிடிச்சுக்கோங்க" தலையை குனிந்தபடி லக்ஷ்மி முனுமுனுத்தாள்.

திலகம் ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருந்தாள். "என்ன லக்ஷ்மி நீ? உனக்கு இதே வேலையாய் போய்டுச்சு. எப்போ பார்த்தாலும் அட்வான்ஸ் அட்வான்ஸ்னு துளைத்து எடுக்குற? நான் ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருக்கேன், அப்புறமா உன் கிட்ட பேசுறேன்"

"இல்லை மா, நான்..."

"போதும், ஒன்றும் சொல்ல வேண்டாம்" என கூறியபடி திலகம் வெளியேறினாள்.

ஆபீஸ் முடிந்து மாலை ஆறு மணிக்கு திலகம் வீடு திரும்பினாள். இப்போது உடனே பேசினால் திட்டு தான் வாங்க வேண்டி இருக்கும் என்பது தெரிந்து அரை மணி நேரம் பொறுத்து லக்ஷ்மி திலகத்தை நோக்கி சென்றாள்.

"அம்மா, எனக்கு..."

"வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா?"

"அம்மா, மன்னிச்சுகோங்க. ரெண்டு நாளா வீட்டுல அடுப்பு எரியலை. இன்னிக்கு மட்டும் நீங்க குடுத்தீங்கன்னா எப்டியும் சமாளிச்சுடுவேன். ஒரு பால் பாக்கெட் வாங்க கூட காசு இல்லை மா"

"சும்மா கழுத்தை அறுக்காதே. உனக்கு ஏற்றகனவே நிறைய குடுத்து இருக்கிறேன். முதல்ல பழைய பாக்கியை அடைச்சுட்டு அப்புறமா பார்க்கலாம். நீ கிளம்பு, எனக்கு வெளிய போற வேலை இருக்கு".
சோர்வுடன் லக்ஷ்மி கிளம்பினாள்.

சிறிது நேரம் கழித்து பக்கத்து கோவிலில் திலகம் பய பக்தியோடு ஐயரை பார்த்து கூறிக்கொண்டு இருந்தாள் "ஐயரே, பத்து பால் பாக்கெட் கொண்டு வந்து இருக்கிறேன். பேஷா ஒரு பால் அபிஷேகம் பண்ணிடுங்கள்"

Comments

Popular posts from this blog

The Buzz

Hit and Run

Guilty or not?