திக் திக் நிமிடங்கள் - 4

"ஹலோ அகில்! என்னை ஞாபகம் இருக்கா?"

"கார்த்திக்! நீ எப்படிடா இங்கே? எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து? வா வா, உள்ளே வந்து உட்காரு. மதி... யார் வந்து இருக்காங்கனு பாரு. என் ஸ்கூல் நண்பன்..."

"வணக்கம் கார்த்திக்! ஒரு நிமிஷம், காபி கொண்டு வரேன்"

"வேண்டாம் சிஸ்டர். உடனே கிளம்பனும். டேய்! எனக்கு கல்யாணம் டா, நீ கண்டிப்பா வர வேண்டும் சரியா? இந்தா பத்திரிக்கை. நிறைய வேலை இருக்குடா, நான் கிளம்புறேன். வருகிறேன் சிஸ்டர், நீங்களும் அவசியம் வர வேண்டும்" என்று விடை பெற்றான் கார்த்திக்.

"இப்போ என்ன அகில் செய்யலாம்? இந்த இக்கட்டில் இருந்து மீள வழியே இல்லையா?"

அப்போது அவர்கள் வீட்டு தொலைபேசி அலறியது. அகில் நடுக்கத்தோடு எடுத்தான்.

"ஹ..ஹலோ!"

"ஹாய் அகில். போடோஸ் பார்த்தியா? நேர்ல பார்கிறது விட, அதுல இன்னும் ஹன்ட்சம்-அ இருக்க."

"உனக்கு என்ன வேண்டும்? யார் நீ? எங்களை ஏன் இப்படி சித்திரவதை செய்யுற?"

"நல்ல கேள்வி. நான் யார் என்பது முக்கியம் இல்லை. எனக்கு என்ன வேண்டும் கேட்ட பார்த்தியா? அது புத்திசாலித்தனம். 20 லட்சம் வேண்டும், ரெடியா?

"என்னது 20 லட்சமா? என்னிடம் அவ்ளோ..."

"இந்த கதை எல்லாம் என் கிட்ட வேண்டாம். உன்னிடம் பேரம் பேச எனக்கு நேரம் இல்லை"

"ப்ளாக்மெயில் குற்றத்துக்கு எவ்ளோ நாள் உள்ளே இருக்கணும் தெரியுமா?

"உனக்கு அறிவு கம்மி னு எனக்கு தெரியும். ஒரு கொலையை பண்ணிட்டு அதை ஒழுங்க மறைக்க கூட உனக்கு தெரியவில்லை. அதை புதைக்க போனியே, மோப்ப நாய் நேராக உன் கிட்ட தான் வந்து நிக்கும் னு உனக்கு தெரியாதா? நான் தான் அந்த பிணத்தை வேற இடத்தில் எரித்தேன். இப்போ அதே மாதிரி சிறுபிள்ளைத்தனமா பேசுற. ப்ளாக்மெயில்-க்கு எவ்ளோ நாள் இருக்கட்டும், ஒரு கொலைக்கு எவ்ளோ வருடம் தெரியுமா?"

"நான் அந்த கொலையை செய்யவில்லை. யாரோ..."

"இதோ பார். உன் கிட்ட எந்த பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை. 20 லட்சம் ரெடி பண்ணு. ஒரு வாரத்தில் உனக்கு கால் பண்றேன். நீ தரலை, எட்டாவது நாள் நான் போலீஸ் கிட்ட இந்த போடோஸ் காட்டுவேன். அவங்க கிட்ட உன் கதையை சொல்லிக்கோ"

"ஹலோ..ஹலோ...."

மதியிடம் எல்லா விவரத்தையும் கூறினான்.
"நாம் நன்றாக மாட்டிக்கொண்டோம் மதி. அவன் கேட்ட பணத்தை தருவது தவிர நமக்கு வேற வழி இல்லை"

"நீ இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு சேர்த்தது எல்லாம் இப்படி போகனுமா? நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே. கடவுள் நம்மை ஏன் இப்படி சோதிக்கிறார்?" மதி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். "ஆனால் ஒன்று, பணம் என்ன பெரிய பணம், போனால் திரும்ப வரும். உன்னை எக்காரனத்துக்கும் நான் இழக்க மாட்டேன் அகில்" என கூறி அவனை ஆரத்தழுவிக் கொண்டாள்.

இப்படி பட்ட ஒருத்திக்காக உயிரையும் குடுக்கலாம். பணம் எம்மாத்திரம் என்று அகில் எண்ணிக்கொண்டான்.

அகில் நான்கே நாட்களில் பணத்தை ஏற்பாடு செய்தான். பின் அவனின் கால்-காக பொறுமையோடு காத்திருக்க ஆரம்பித்தான்.

சரியாக ஏழாவது நாள் மாலை 6:00 மணிக்கு அவன் கால் செய்தான்.
"என்ன? பணம் ரெடியா?

"நீ கேட்ட பணம் ரெடி. எப்போ வந்து வாங்குற?"

"நான் வரலை. உன் அழகான மனைவியை அனுப்பு. நான் அவளிடம் தான் வாங்குவேன். அவள் மட்டும் தனியாக தான் வர வேண்டும். புரியுதா?"

"சரி, எங்கே வர வேண்டும்?"

"ஹோட்டல் கங்கா. அட்ரஸ் நோட் பண்ணிக்கோ....சரியாக மாலை 7:30 க்கு வர வேண்டும். நான் நீல நிற சட்டையில் இருப்பேன்."

அகில் மதியிடம் விவரத்தை கூறினான்.
"ஐயோ, எனக்கு தனியாக போக பயமாக இருக்கிறதே"

"கவலை படாதே! ஒரு கத்தியும் எடுத்துக்கொள். அவன் ஏதும் வாலாட்டினால், தைரியமாக எதிர் கொள். அவனுக்கு தேவை பணம் தான். பணத்தை கொடுத்து விட்டால், அவனால் ஏதும் பிரச்சனையை வராது என்று தான் நினைக்குறேன்"

மதி கார்-இல் கிளம்பினாள். அகிலன் அவளின் வருகைகாக காத்திருக்க ஆரம்பித்தான்.

அந்த ஹோட்டல் வாசலில் இறங்கினாள். யாரும் பார்த்து விடுவார்களோ என்று சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியபடியே சென்றாள். அந்த ஹோட்டல்-இன் மூழையில் அந்த நீல நிற சட்டைக்காரன் இருந்தான். அவளை பார்த்து பல் இளித்தான். அவனை நோக்கி மதி சென்றாள்.

அவன் வேற யாருமில்லை. சடலமாக அவள் வீட்டில் இருந்தவன் தான். அவனிடம் அவள் கண்ணில் மயக்கமுமாய் உதட்டில் சிரிப்புமாய் கூறினாள்.

"நம் பிளான் வெற்றி!!"

Comments

Popular posts from this blog

The Buzz

Hit and Run

Guilty or not?