விருந்து (ஒரு பக்க கதை)

சரோஜா! இன்னிக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் வராங்க. சமையல் தடல் புடலா இருக்கனும் சரியா. கோழி கொழம்பு வச்சுடு. நண்டு வருத்துடு. உன்னோட ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டையும் செஞ்சிடு"

"சரிம்மா"

சரோஜாவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு தன் ஆறாவது படிக்கும் மகன் அருண் கூறியது நினைவு வந்தது.

"அம்மா, பல ஸ்கூல்ஸ் கலந்துக்கிட்ட ஓட்ட பந்தயத்துல நான் தான் முதல் பரிசு வாங்கிருக்கேன். இன்னிக்கு உன் சமையல்ல எனை அசத்தனும் சரியா" என்று கூறி விட்டு அருண் பறந்து விட்டான்.

ஒரு சாம்பார் வைக்க கூட காசில்லை என்று வருத்தபட்டுகொண்டு இருந்த போது தான், தன் வீட்டு எஜமானி அன்றைய விருந்தை பற்றி கூறினாள். இனிமேல் கவலை இல்லை. எப்போதும் போல் இன்றும் நம் வீட்டுக்கும் அனுப்புவார்கள். ஆண்டவானாக பார்த்து இப்படி செய்திருக்கிறார் என்று மனம் குளிர்ந்து சமைக்க ஆரம்பித்தாள்.

இரண்டு மணி நேரத்தில் சமையல் முடிந்தது. எப்போதும் விட அன்று ருசி தூக்கலாக இருபது போல அவளுக்கு தோன்றியது. மகனை நினைவில் கொண்டு சமைத்ததால் இருக்குமோ?

எல்லாரும் மிக விரும்பி சாப்பிட்டார்கள். மாப்பிள்ளையின் அம்மா அவளை அழைத்து தன்னுடன் வந்தால் நூறு ருபாய் கூட்டி குடுப்பதாக சொன்ன போது உச்சி குளிர்ந்து விட்டது அவளுக்கு. ஆனாலும் மென்மையாக மறுத்து விட்டாள். எல்லாரும் கிளம்பிய பிறகு வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக சமையல் அறையினுள் நுழைந்தாள். அப்போது தான் பார்த்தாள். எல்லா பாத்திரங்களும் காலியாக இருந்தது.

"சரோஜா! எப்போதுமே கொஞ்சம் மீதம் இருக்கும். ஆனால் இன்று உன் சமையலின் ருசியில் அனைவரும் மெய் மறந்து நிறைய சாபிட்டோம். இந்தா வைத்துக்கொள்" என்று நூறு ருபாய் நோட்டை அவள் கையில் திணித்தால் அவள் எஜமானி.

சரோஜா சோர்வுடன் கிளம்பினாள். இப்போது நேரம் ஆகி விட்டது. இனி சமைக்க ஆரம்பித்தால் நேரம் ஆகும், அருண் பசி பொறுக்க மாட்டான். அவனுக்கு ஹோட்டல் சாப்பாடும் பிடிக்காது. அம்மா சமையல் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பான். சரி, நாளை அவனுக்கு பிடித்தது சமைக்கலாம், இன்று பழைய சாதம் போதும் என்று முடிவெடுத்தாள்.

"அம்மா பசிக்குது, சீக்கிரம் கொண்டு வா"
"இதோ வரேன் குட்டி. இன்னிக்கு அம்மா கிட்ட கோவிக்க கூடாது செல்லம், சரியா. நாளைக்கு அம்மா உனக்கு பிடிச்சதா சமைப்பேனாம்" என்று கொஞ்சி விட்டு சாதம் பரிமாறினாள்.
"ஹேய்ய்ய்ய், அம்மானா அம்மா தான். எனக்கு பிடிச்ச பழையது வச்சுருக்கியே. என் ப்ரென்ட் சரவணன் அவனோட வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டான். உன் சமையல் மாதிரி வரவே வராதுனு பெட் கட்டிட்டு வந்துட்டேன். நீ என்னடானா இப்படி என்னை ஏமாத்திரியே"
என்று செல்லமாக கோவப்பட்டு ஆசையாக சாப்பிட ஆரம்பித்தான்.

சரோஜா நெகிழ்ந்து அவனை மார்புடன் அணைத்துக் கொண்டாள்.

Comments

Popular posts from this blog

The Buzz

Hit and Run

Guilty or not?