மறுபிறவி
யசோதா அழுது அழுது கண் இரண்டும் உப்பி இருந்தது. சிறிது நேரத்துக்கு எல்லாம் கண்ணீர் வற்றி சுய பட்சாபம் தோன்றி அவளை வாட்டியது. எனக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி ஒரு அம்மாவை தந்தார். எப்போது பார்த்தாலும் என்னை குறை கூறுவதே அம்மாவுக்கு வேலையாய் போய் விட்டது. குனியாதே! நிமிரதே! சத்தம் போடாதே! எதிர்த்து பேசாதே! என்று எப்போதும் என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள். சை! நன் பிறந்திருக்கவே கூடாது. பிறந்தது தான் பிறந்தேன், வசந்தியின் வீட்டில் பிறந்து இருக்கலாம் அல்லவா. அவள் அம்மா தான் எவ்வளவு நல்லவர்கள். என்னிடம் நிறைய அன்பு செலுத்துகிறார்கள். என்னை ஒரு வாட்டியும் அதட்டியதே இல்லை. இங்கே வந்து பிறந்து இப்படி மாட்டி கொண்டேனே. மறுபடியும் அவளுக்கு கண்ணீர் பொங்கியது. அடக்கி கொண்டாள். கூடாது. கூடவே கூடாது. அழுது ஒன்றும் ஆகப் போவது இல்லை. இந்த அம்மாவுக்கு நல்ல பாடம் ஒன்று புகட்ட வேண்டும். அப்போது தன் என் அருமை புரிந்து கொள்வாள். என்ன செய்யலாம்? சட்டென்று மின்னல் வெட்டியது போல் அந்த எண்ணம் தோன்றியது. வீட்டை விட்டு போய் விட்டால் என்ன? அம்மா என்னை நினைத்து தவியாய் தவிப்பார்கள். தவிக்கட்டும்....